கொரோனா 3-வது அலைக்கு மதுரை தப்புமா
கொரோனா 3-வது அலைக்கு மதுரை தப்புமா?
கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்ததன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 98 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா பரவலை முற்றிலும் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஊரடங்கு, முழு ஊரடங்கு என்று மதுரை மாவட்டத்தில் பல மாதங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டதுடன் பொருளாதார ரீதியிலும் மதுரை மாவட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசிகள் மதுரை மாவட்டத்தில் இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை 17 சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதன் காரணமாக மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 793 பேரும், மாநகராட்சி பகுதிகளில் 15 லட்சத்து 44 ஆயிரத்து 225 பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 82,345 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில் மதுரையில் இதுவரை 31 லட்சத்து 22 ஆயிரத்து 363 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
இதில் முதல் டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 61 ஆயிரத்து 952 ஆகும் இது மதுரை மக்களின் தொகையில் 80.2 சதவீதம் ஆகும். ஆனால் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 60 ஆயிரத்து 411 ஆக உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 47.5 சதவீதமாக உள்ளது.
ஓராண்டுகள் தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு அனைவருக்கும் போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டும் கூட இன்னும் 52.5 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளாமல் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் மதுரை மாவட்டம் 100 சதவீத இலக்கை அடைவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலை மற்றும் 2-வது அலை ஓய்ந்து தற்போது தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று உள்ளிட்ட 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தற்போது அரசு அமல்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மக்கள் தடுப்பூசியை செலுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதால் கொரோனா 3-வது அலை மதுரைக்குள் வந்துவிடுமோ? என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
எனவே கொரோனா தொற்றை மீண்டும் மதுரைக்குள் நுழைய விடாமல் தடுப்பது பொதுமக்களின் கையில்தான் இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. மேலும் பள்ளி செல்லாத குறிப்பிட்ட வயது உடைய இளைஞர்களுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே இன்னும் மெத்தனம் காட்டாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை செலுத்தி மதுரை மாவட்டத்திலிருந்து கொரோனா அரக்கனை விரட்ட தங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment